ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி?
இன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் - எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.- சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும்.
பக்க எண் வாரியாகக் குறிப்புகள்:
1. முதற்பக்க அட்டையில் ஒரு பிரபல நடிகையின் “ஜிலீர்” படத்தைப் போடவும்.
2. முழுப்பக்க வெளியாள் விளம்பரம்
3. இங்கு விகடன் தாத்தா படத்துடன் விகடன் பிரசுரத்துக்கான விளம்பரம் போடவும்.
4. இங்கு தலையங்கம் எழுத வேண்டும். இது மிகவும் எளிமையான ஒன்று. இறந்த யாருக்கும் ஒரு அஞ்சலி, ஏதாவது ஒரு அரசியல் நிகழ்வுக்குக் கண்டனம், யாருக்காவது அறிவுரை, எதற்காவது கவலை, பாராட்டு என்று வாரம் ஒன்றாக சுழற்சி முறையில் எழுதவும்.
5 - 8 . வெளியாக உள்ள புதுத் திரைப்படம் / பூசை போடப்பட்ட திரைப்படம் ஒன்றின் படங்கள், அதன் இயக்குனர் பேட்டியை வெளியிடவும்.
9. ஒரு பக்கச் சிறுகதை ஒன்று போடவும்.
10. பெண்கள் கல்லூரிப் பேட்டி ஒன்று போடவும். மாணவிகள் எல்லாம் கையைத் தூக்கியோ சைகைக் காட்டியோ எல்லாப் பல்லும் தெரிய pose தர வேண்டும். ஜீன்ஸ், சுரிதார் என்று வகைக்கு ஒன்றாக அணிந்திருக்க வேண்டும். இவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் - அ) sms joke ஆ) பிடித்த நடிகர் இ) என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். பெண்களின் படத்தை நன்றாக எடுத்து வருமாறு நிருபரை அறிவுறுத்தி அனுப்பவும்.
11 - 13. யாராவது ஒரு அறிவுஜீவியைக் கூப்பிட்டு எதையாவது எழுதச் சொல்லவும். இவர் ஏட்டிக்குப் போட்டியாக எழுதுதல் நலம். ஒரு உலக நடப்பை ஒப்பிடுவது, பிரபலத்தைச் சிலாகிப்பது ஆகியவை அவசியம்.
14 - 16 . ஒரு நையாண்டிக் கதை. இதில் அரசியல்வாதிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இடம்பெறுதல் நலம்.
17. ஒரு கேலிச் சித்திரம்.
18 - 20 . கேள்வி பதில் பகுதி.இதில் வெளியிடப் பரிந்துரைக்கப்படும் கேள்விகள் - அ) முதலைக்கு மூக்கு இருக்கா? ஆ) மூன்றாம் மொகலாய மன்னனுக்கு எத்தனை மனைவிகள்? இ) xஐயும் yஐயும் ஒப்பிடவும் ஈ) அண்மையில் பார்த்த படம், படித்த புத்தகம் என்ன?இங்கு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு பளப்பளா நடிகை படத்தை போடுங்கள். கேள்வி பதில்கள் அளவை விட படத்தின் அளவு பெரிதாக இருத்தல் நலம். தொப்புள் போன்ற பகுதிகளை சிறப்பாகக் காட்டினால் வாசகர் மகிழ்வார்.
21 - 23 . இலக்கியப் பகுதி.இங்கு பிரபல இலக்கியவாதி தான் படித்த புத்தகம், போய்ப் பார்த்த ஊர்கள், கடந்து வந்த மனிதர்கள் குறித்து எழுத வேண்டும்.
24 - 27. திரை விமர்சனம்.
36ல் இருந்து 42க்குள் ஒரு மதிப்பெண் போடவும். camera பசுமையா இருக்கு, பாட்டு இன்னும் நல்லா போட்டிருக்கலாம், hero-heroine chemistry அருமை, இயக்குனருக்கு ஷொட்டு, ஹீரோயின் ஜிலீர் சோடா - போன்ற சில வரிகளை மாற்றி மாற்றி எழுதவும்.
28 - 32 . மன ஊக்கப் பகுதி.ஒரு சாமியாரைக் கூப்பிட்டு package முறையில் தத்துவம் எழுத சொல்லவும். இவர் ஆண்டுக்கணக்கில் இதை எழுத வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்வது நன்று.
33 - 34. முழுப்பக்க வெளியாள் விளம்பரங்கள்.
35 - 37 புதுவரவான கேரள / மும்பை நடிகைகளின் பேட்டி. விகடனை நாம் கிண்டி முடிக்கப் போகும் நேரம் வந்து விட்டதால் படம் எப்படி போட வேண்டும் என்று இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இது வரையுள்ள குறிப்புகளை இன்னொரு முறை கிண்டிப் பழகவும்.
38 - 40 ஜல்லிப் பகுதிவானம் ஏன் கீறல் விழுந்த மாதிரி தெரிகிறது, மொஹஞ்சதாரோ சிற்பங்களில் உள்ள அடவுகளை கணினிக்கு கொண்டு வர நிரல் எழுதுவது எப்படி, பழைய தமிழ் இலக்கியப் பாட்டுக்குப் பொருள் என்று கலந்து கட்டி ஜல்லி எழுத ஒரு நல்ல ஆளாகப் பிடிக்கவும்.
41 - 42 அரசியல்வாதி பேட்டிவாரம் ஒரு முறை வைத்து, தமிழகத்தில் உள்ள 52க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களையும் பேட்டி எடுத்துப் போடவும். கேட்க வேண்டிய கேள்விகள் - அ) அணி மாறப் போறீங்களாமே? ஆ) உங்க வாரிசு இப்படியாமே? இ) விடுதலைப்புலி பத்தி என்ன சொல்லுறீங்க?
43 - 45 ஆன்மிகம்ஒரு கோயில் படம். பயணக் குறிப்பு, தல புராணம். மகிமை.
46 - 48 திரைப்படத் துறை ஆட்களின் தொடர்.இவர் அண்மையில் வெற்றி பெற்ற இயக்குனராகவோ சோத்துக்குத் திண்டாடும் பழைய நடிகராகவோ இருக்கலாம்.
49. வெளியாள் விளம்பரம்.
50. அட்டைப் பட விளம்பரம்.
கிண்டிய பின்:
இந்த இதழில் கூடுதலாக திரைச் செய்திகள் வந்து விட்டதால் , இதை சினிமா ஸ்பெஷல் என்று அறிவிக்கவும். எல்லா இதழ்களிலும் இதே அளவு திரைச் செய்திகள் இருக்கும். ஆனால், அவற்றை பொங்கல் சிறப்பிதழ், தீபாவளிச் சிறப்பிதழ் என்று பெயர் மாற்றிக் கொள்ளவும்.- ஜிலீர், பளீர், குற்றால குல்ஃபி, இளமை carnival போன்ற சொற்களைத் தூவி விடவும்.
பொதுவான சமையல் உத்திகள்:
ஆண்டுக்கு ஒரு முறை newsprint விலை ஏறிவிட்டது என்று புலம்பி விலையேற்றிக் கொள்ளவும். கூடுதல் பக்கங்கள் தருவதாகச் சொல்லி அவற்றில் விளம்பரம் போடவும்.- ஆறு மாதத்துக்கு ஒரு முறை விகடன் தாத்தா புதுத் தோற்றத்தில் வருவதாகச் சொல்லி அறிவிப்பு விடவும்.- தீபாவளி, பொங்கலுக்கு இரட்டைச் சிறப்பிதழ் வெளியிடுவதாகச் சொல்லி 25 பக்க அளவில் இரு புத்தகங்கள் தரவும்.- நேரம் கிடைக்கும்போது முன்பு நன்றாக இருந்த விகடன் படைப்புகளைத் தொகுத்து வைத்தால் தீபாவளி மலரை ஒப்பேற்ற உதவியாக இருக்கும்.- எத்தனைப் பக்கங்களில் விகடன் கிண்டினாலும் இந்த formulaவை மாற்ற வேண்டாம்.
Tuesday, September 25, 2007
ஆனந்த விகடன்
Posted by சசி at 7:16 PM
Labels: ஆனந்த விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான கிண்டல்.
இவ்விடுகை முதலில் வெளியான ravidreams பதிவுக்கு ஒரு இணைப்பு கொடுத்திருக்கலாமே?
Post a Comment